கூடங்குளம் அணுமின்நிலைய வளாக இயக்குநருடன் ஆலோசனை அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைவதால் பாதிப்பில்லை: தமிழிசை பேட்டி

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் வளாக இயக்குநர் சஞ்சய்குமாரை தமிழக பாஜ தலைவர் தமிழிசை நேற்று அணுமின் நிலைய நகரியத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் அளித்த பேட்டி:  கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளினால் அபாயகரமான கதிர்வீச்சு பரவுகிறது என்றும் இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலிருந்தும் கழிவுகளை கூடங்குளத்தில் சேமிக்க போவதாகவும்  தகவல்கள் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அச்சத்தை போக்குவதற்கு விழிப்புணர்வு தேவை. கூடங்குளம் அணுஉலை செயலாக்கம் பற்றியும், அதன் கழிவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தேன். அணுக்கழிவுகளை இங்கேயே சேமிப்பதற்கு 2022 வரை அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு கால  அவகாசம் உள்ளது. வெளியில் கழிவுகளை சேமிப்பதற்கு ஒரு கிடங்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியிருக்கிறோம்.

 இதற்காக மத்திய அரசு பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தி அவர்களின் அச்சத்தை  போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதிகாரிகள் இந்த கழிவுகளை சேமிப்பதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் மக்களுக்கு எதிர்மறையான  கருத்துகளை கொண்டு போய் சேர்க்கின்றனர் என கூறினார்.இதனிடையே கூடங்குளம் அருகே செட்டிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரெங்கநாராயணபுரத்தை ேசர்ந்த பாஜகவினர், பொதுமக்கள், கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசையிடம் மனு அளித்தனர்.

Related Stories: