உபி.யில் 2022ல் ஆட்சியை பிடிக்க பிரியங்கா காந்தி அதிரடி திட்டம்: வாரம் இருமுறை தொண்டர்களை சந்திக்க முடிவு

புதுடெல்லி: உபி 2022 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரியங்கா காந்தி, காங்கிரசை பலப்படுத்த வாரம் இருமுறை தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் ரேபரேலி தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. இங்கு, சோனியா காந்தி வெற்றி பெற்றார். நாடு முழுவதும் அக்கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. உபி.யில் காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட அமேதியில், பாஜ வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோற்றார்.இந்நிலையில், கடந்த புதன்கிழமை ரேபரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க, சோனியா காந்தியுடன் பிரியங்காவும் சென்றார். அப்போது, கட்சிக்கு உழைக்காதவர்களை கடுமையாக சாடினார். அப்போது பேசிய பிரியங்கா, `மக்களவை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் சிலர்  வெற்றிக்காக உழைக்காதது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளேன்’ என எச்சரித்தார்.

இதைத்தொடர்ந்து வரும் 2022ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, கட்சியை பலப்படுத்த பிரியங்கா முடிவு செய்துள்ளார். இதற்காக, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே முறையான ஒத்துழைப்பு, அவசியம் என தெரிய வந்துள்ளது. இதற்காக, உபி.யில் பிரியங்கா வாரம் இருமுறை கட்சி தொண்டர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அவரது தொடர் சுற்றுப் பயணம் உத்தரபிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தி வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியமைக்க உதவும்,’’ என்றார்.

‘இரும்புக் கரம் கொண்டு பூசலை ஒடுக்க வேண்டும்’

கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி நேற்று அளித்த பேட்டியில், ‘‘மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முன்வந்தார். ஆனால், காங்கிரஸ் செயற்குழு அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்தது. இது சிறப்பான முடிவு. கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை ஆய்வு செய்வதற்கான நேரம் இதுவல்ல. அதற்காக, அனைத்து மாநிலங்களிலும் முறையான பொறுப்பாளர்களை ராகுல் நியமிக்க வேண்டும். மேலும், அகில இந்திய அளவிலும் கட்சிக்கு சரியான தலைவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பது அவசியம். கட்சியில் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். கட்சியில் உட்கட்சி பூசல் செய்பவர்களை கருணை காட்டாமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories:

>