சலுகைகள் வழங்கிய நிறுவனங்களில் இருந்து பாஜக ரூ27ஆயிரம் கோடி தேர்தல் செலவுக்காக வாங்கியது: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

சென்னை: தேர்தலுக்காக பாஜ மட்டும் ரூ27ஆயிரம் கோடியை செலவழித்துள்ளது. இந்த தொகையை அவர்களால் சலுகைகள் பெற்ற பெரிய நிறுவனங்கள் வழங்கியுள்ளன என்று சீத்தாரம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணமான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மதச்சார்பற்ற முற்போக்கு என்ற ஒரு கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கியதால் தான் வெற்றி கிடைத்தது. இதுபோன்ற கூட்டணியை இந்தியா முழுவதும் அமைக்க முடியாமல் போனதே பாஜ வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது. நடந்து முடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜ மட்டும் ₹27 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் செலவிட்டுள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது என்றால், பெரிய நிறுவனங்களுக்கு பாஜ ஆட்சி அளித்த சலுகைகளுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அளித்த பணம் தான் இது.

மீண்டும் பாஜ ஆட்சி அமைந்துள்ளதால் அவர்கள் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடருவார்கள். முதல் தாக்குதல் மதச்சார்பின்மை மீதாக தான் இருக்கும். அடுத்ததாக, தேர்தல் ஆணையம், சிபிஐ போன்றவற்றை வலுவிழக்க செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் தீர்மானங்களை நிறைவேற்றுவதே இவர்களின் நோக்கமாக இருக்கும். அதை தொடர்ந்து, தங்கள் மீதான தவறுகளை சுட்டிகாட்டுபவர்கள் மீதான தாக்குதல் தொடங்குவார்கள். இவற்றை எல்லாம் தடுக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்போதும் தயாராக உள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை தொடருவோம். வாக்குபதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு சதவீதங்களை ேதர்தல் ஆணையத்தால் இப்போது வரை வெளியிட முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: