மதுரை: ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரியுள்ள இயக்குனர் பா.ரஞ்சித், வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசியதாக விளக்கமளித்துள்ளார். கடந்த 5ம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது மன்னர் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார். ராஜராஜ சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட நிலம் பறிக்கப்பட்டது என பேசியிருந்தார். மேலும் அவரது காலம் இருண்ட காலம் எனக் கூறியிருந்தார். சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சி காலத்தில் தான் தொடங்கியது என்ற குற்றசாட்டை ரஞ்சித் முன்வைத்திருந்தார். மேலும் தான் ஒரு ஜாதி வெறியன் என்றும் அறிவித்துக்கொண்ட பா.ரஞ்சித், மாட்டை நீங்கள் கடவுளாக கும்பிட்டால், அந்த கடவுளையே சாப்பிடுபவன் நான் என்றும் காரசாரமாக பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசிவரும் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் மற்றும், முக்குலத்தோர் புலிப்படையினர் புகார் அளித்திருந்தனர். அதேபோல், ராஜ ராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார். 153, 153A ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கலகத்தை தூண்டும் வகையில் பேசியது, சாதி, மதம், மொழி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசியது என இரண்டு பிரிவுகளில் திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல்நிலையத்திலும் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் பா.ரஞ்சித் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் தான் பேச வில்லை என்றும் ஏற்கனவே பல்வேறு தலைவர்கள் இதுபோன்று பேசியிருப்பதாகவும், புத்தகங்களாக வெளியிட்டிருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று உண்மைகளை மட்டுமே பேசியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு முன்பே பலரும் ராஜராஜ சோழன் குறித்து பேசியிருப்பதாகவும், தான் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் இதற்கு முன்பு பேசியவர்கள் குறித்த விவரங்களையும் ரஞ்சித் தனது மனுவுடன் அபிடவிட்டாக தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது நாளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.