குஜராத்தில் கரையை கடக்கும் வாயு புயல்: பேரிடர் மீட்பு குழுக்களை அனுப்பியது இந்திய கடலோர காவல்படை

காந்திநகர்: வாயு புயல் காரணமாக இந்திய கடலோர காவல்படை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுக்களை அமைத்துள்ளது. பேரிடர் மீட்பு குழுக்களை அமைத்து தமன், தஹானு மும்பை, முருட்ஜஞ்சிரா, ரத்னகிரி, கோவா கார்வார், மங்களூர், பேப்பூர், விஜின்ஜம் & கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ளது. அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘வாயு’ புயல் குஜராத் மாநில கரையோரத்தில் நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால் அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertising
Advertising

குஜராத்தில் கரையை கடக்கும் வாயு புயல்:

குஜராத்தில் போர்பந்தர் மற்றும் மாகுவா பகுதியில் ‘வாயு புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள வாயு, மணிக்கு காற்றுடன் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் குஜராத் கடல் பகுதியில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல, தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. கேரளா மட்டுமின்றி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், வாயு புயலால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவா மற்றும் கோங்கன் பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இந்திய விமானப்படை விமானம் இன்று காலை ஜாம்நகரில் தரையிறங்கியது. ராணுவம், கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் என அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடக்கும் போது 110 கி.மீ. முதல் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், அம்மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள 3 லட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கட்ச் பகுதி முதல் தெற்கு குஜராத் வரை உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள இடங்கள் ‘ஹை அலெர்ட்டில் வைக்கப்பட்டுள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட உள்ள பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளை வெளியேற்ற குஜராத் மாநில அரசு சார்பில் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதிப்பு உள்ள தமன், தஹானு மும்பை, முருட்ஜஞ்சிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் விரைந்துள்ளன. இந்த நிலையில், வாயு புயலுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

Related Stories: