செங்குன்றம் அருகே தார் ஷீட் கம்பெனியில் தீவிபத்து : பொருட்கள் எரிந்து நாசம்

புழல்: செங்குன்றம் அருகே தார் ஷீட் தயாரிக்கும் கம்பெனியில் நேற்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது.

அம்பத்தூர் சந்திரசேகரபுரம் 3வது தெருவில் வசித்து வருபவர் சங்கர் (48). இவர், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பாயசம்பாக்கம் பகுதியில் தார் ஷீட் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த 10 பேர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் நெருப்பை சரிவர அணைக்காமல் தொழிலாளர்கள் சென்று விட்டனர். அந்த நெருப்பு புகைந்து கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை சங்கர் மற்றும் தொழிலாளர்கள் வழக்கம் போல் கம்பெனிக்கு வந்தார். அப்போது, திடீரென அந்த நெருப்பு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

குபீரென தீப்பிடித்ததால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதனால், அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அங்கிருந்த பொருட்கள் எரிந்தது. தகவலறிந்து மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த தார் ஷீட், கோணிகள், உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

12 குடிசைகள் சாம்பல்

வியாசர்பாடி அன்னை சத்யா நகரில்,  30 குடிசை வீடுகளில் 100க்கும் மேற்பட்டோர்  வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு இங்குள்ள ஒரு  குடிசையில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி  பக்கத்து குடிசைகளுக்கும் பரவியது. இதனால், அதில் இருந்தவர்கள்  அலறியடித்து வெளியில் ஓடினர்.

தகவலறிந்து வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர்,  செம்பியம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 12 குடிசைகள் மற்றும் அவற்றில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம்  குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: