சிறந்த நாடக ஆசிரியர், முற்போக்கு சிந்தனையாளர் ஞானபீட விருது பெற்ற கிரீஷ் கர்னாட் காலமானார்

பெங்களூரு: சிறந்த நாடக ஆசிரியரும், முற்போக்கு சிந்தனையாளருமான ஞானபீட விருது பெற்ற கிரீஷ் கர்னாட் பெங்களூருவில் நேற்று காலமானார். மத்திய அரசின் ஞானபீட விருது பெற்ற கிரீஷ் ரகுநாத் கர்னாட், பெங்களூருவில் வசித்து வந்தார். 81 வயதான அவர் 1938ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தாலும் கல்வி பயின்றது எல்லாம் கர்நாடக மாநிலத்தில்தான். கன்னட மொழியில் புலமைமிக்கவர். கன்னடம் மட்டும் இன்றி இந்தி, பஞ்சாபி, உள்ளிட்ட மொழிகளிலும் வல்லவர். அவர் இயக்கிய மா நிஷாதா, யுமாதி, துக்ளக் உள்ளிட்ட நாடகங்கள் மிகவும் சிறப்பானவை.

இதுதவிர கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் குணசித்திர பாத்திரங்களை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது திறமைக்கு பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளும், ஞானபீட விருது தவிர கர்நாடக அரசின் விருதுகளும் அவருக்கு கிடைத்தது. இவ்வளவு சிறப்பு மிக்க கிரீஷ் கர்னாட் பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியிலுள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த ஒரு சில நிமிடங்களில் இறந்தார்.

மறைந்த கிரீஷ் கர்னாட், முற்போக்கு சிந்தனை உடையவர். கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் என 76க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ‘நான் அடிமை இல்லை’ உள்பட 9 தமிழ் படங்களில் கிரீஷ் கர்னாட் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன. ‘காதலன்’ படத்தில் நடிகர் பிரபுதேவாவின் காதலுக்கு குறுக்கே நிற்கும் நடிகை நக்மாவின் தந்தை பாத்திரத்தில் கிரீஷ் கர்னாட் நடிப்பில் தனி முத்திரை பதித்து இருந்தது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்னர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்:

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் தனது மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக நின்றவர் கிரீஷ் கர்னாட். நாட்டின் பன்முகத்தன்மைக்காக தனது ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்ட கிரீஷ் கர்னாட்டை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய மற்றும் திரைப்பட உலகத்திற்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: