தான் பிறந்தபோது உடனிருந்த நர்சை நேரில் சந்தித்து நெகிழ்ந்த ராகுல்காந்தி

கோழிக்கோடு: ஐக்கிய முற்போது கூட்டணி தலைவரான சோனியா காந்திக்கு ராகுல்காந்தி பிறந்தபோது பிரசவம் பார்த்த நர்சை ராகுல் நேற்று சந்தித்து மகிழ்ந்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி கடந்த 1970ம் ஆண்டு ஜூன் மாதம் தலைபிரசவத்திற்காக டெல்லியில் உள்ள ஹோலி குடும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 19ம் தேதி ராகுல் காந்தி பிறந்தார். சமீபத்தில் மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த சர்ச்சை எழுந்தது.

அப்போது கேரளாவைச் சேர்ந்த ராஜம்மா வாவாதில் என்பவர், சோனியா காந்திக்கு பிரசவம் நடந்தபோது தான் உடனிருந்ததாகவும், ராகுல்காந்தி பிறந்தபோது அவரை தன் கைகளில் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். ஹோலி மருத்துவமனையில் நர்ஸ் பயிற்சி முடித்த பின் ராணுவ மருத்துவனையில் பணியாற்றி ராஜம்மா, பின்னர் 1987ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று சொந்த மாநிலமான கேரளாவில் குடியேறினார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று கோழிக்கோடு வந்த அவர், தான் பிறந்தபோது நர்சாக இருந்து உதவிய ராஜம்மா அங்கிருப்பதை அறிந்தார். அவரை பார்ப்பதற்கு விருப்பம் தெரிவித்தார்.

விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த ராகுல் காந்தியை கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் விவசாயிகள், பல்வேறு பிரிவினர் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனர். இதனால் ராகுல் காந்தியை பார்ப்பதற்காக வந்த ராஜம்மாவால் உடனடியாக அவரை பார்க்க முடியவில்லை. எனவே அவர் நீண்ட நேரம் காத்திருந்தார். அதன் பின்னர் ராகுல் காந்தியை அவர் சந்தித்தார். நர்ஸ் ராஜம்மாவை ராகுல் காந்தி கட்டியணைத்து நெகிழ்ந்தார். அவரது கணவர் மற்றும் பேரக்குழந்தைகளையும் சந்தித்து பேசினார். பின்னர் தான் பிறந்தபோது நடந்த நிகழ்வுகளை குறித்து ராஜம்மாவிடம் ராகுல்காந்தி கேட்டறிந்தார். தொடர்ந்து ராஜம்மா, ராகுலுக்கு பலாப்பழம், சிப்ஸ், இனிப்பு உள்ளிட்டவற்றை கொடுத்து மகிழ்ந்தார்.

Related Stories: