நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் கண்காணிப்பு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : நிபா வைரஸ் தாக்காமல் இருக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார். தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், கேரள எல்லையில் மருத்துவ சோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது,நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது; வெளி மாநிலத்தில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்; கழுவாத காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம்; கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் அல்லாமல் நேரடியாகவே நடைபெறும்; ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் 4 நாட்கள் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெறும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: