குப்பை சேகரிக்கும் வாகனத்தில் உள்ள தொட்டி பழுதால் தெருவெங்கும் குப்பைகள் காற்றில் பறக்கும் அவலம்

கரூர் : கரூர் நகராட்சி சார்பில் இயக்கப்படும் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் உள்ள தொட்டிகள் பழுதடைந்துள்ளதால், தெருவெங்கும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் நகராட்சி சார்பில் இயக்கப்படும் வேன்களில் பொருத்தப்பட்டுள்ள தொட்டிகள் மூலம் அள்ளப்பட்டு, வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.‘அந்த வகையில், கரூர் நகராட்சி சார்பில் குப்பைகளை அள்ள 3 வேன்கள் செயல்படுகிறது. இந்த வேன்களில் இணைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை தொட்டிகள் அனைத்தும் ஓட்டை உடைசலாக உள்ளதால், குப்பைகள் ஏற்றிக் கொண்டு வேன் செல்லும் போது, காற்றில் குப்பைகள் வெளியேறி தெருவுக்குள் பரவி கிடக்கிறது.

குப்பைகள் தெருவுக்குள் பரவுவதால் பல்வேறு சுகாதார சீர்கேட்டினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், வேன்கள் செல்லும் போது, குப்பைகள் பறப்பதாலும், பின்னால் வரும் வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதிப்படுகின்றனர். கூடுதல் வாகனங்களும், புதிதாக தொட்டிகளும் இணைக்கப்பட வேண்டும் என பணியாளர்கள் பலமுறை முறையிட்டும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது . எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரூர் நகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்க புதிய தொட்டிகளுடன் கூடுதல் வாகனங்கள் செய்து தர தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: