மக்களவை தேர்தலில் மகனுக்கு சீட் கேட்டு ப.சிதம்பரம் மிரட்டினார்: செயற்குழுவில் ராகுல் ஆவேச குற்றச்சாட்டு கெலாட், கமல்நாத் ரகசியத்தையும் உடைத்தார்

புதுடெல்லி: ‘‘மக்களவை தேர்தலில் தனது மகனுக்க சீட் தரவில்லை என்றால், கட்சியில் இருந்து விலகுவேன் என ப.சிதம்பரம் மிரட்டினார்,’’ என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதேபோல், தங்கள் மகன்களுக்கு சீட் கேட்டு முதல்வர்கள் அசோக் கெலாட், கமல்நாத் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்தார். காங்கிரசில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜ 303 இடங்களை அள்ளியது. ஆனால், காங்கிரஸ் 52 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இதனால், காங்கிரஸ் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பல வியூகங்களை வகுத்தும்,, மக்களை கவரும் விதத்தில் தேர்தல் அறிக்கை தயாரித்தும், தோல்வியை சந்தித்தது ஏன் என ஆராய காங்கிரஸ் செயற்குழு டெல்லியில் நேற்று முன்தினம் கூடியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உ.பி கிழக்கு பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் பேசும்போது, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், இதை நிராகரித்த காங்கிரஸ் செயற்குழு, ‘இந்த தோல்வியால் மனம் உடையத் தேவையில்லை. இந்த சிக்கலான நேரத்தில் நீங்கள் கட்சியை தொடர்ந்து வழிநடத்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தது. மேலும், கட்சியை அனைத்து மட்டத்திலும் முழுமையாக மாற்றியமைக்க ராகுலுக்கு அதிகாரமும் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய ஜோதிராதித்யா சிந்தியா, ‘‘நாடு முழுவதும் வலிமையாக உள்ள உள்ளூர் தலைவர்களை சேர்த்து கட்சியை வளர்க்க வேண்டும்,’’ என்றார். இதற்கு பதில் அளித்த ராகுல், தனது மனதில் குமுறிக் கொண்டிருந்த விஷயங்களை கொட்டித் தீர்த்தார். கடந்த 5 மாதத்துக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் கஷ்டப்பட்டு பாஜ.விடம் இருந்து ஆட்சியை பிடித்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தை ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை.

சிதம்பரத்தை பார்த்து ராகுல் பேசியதாவது:

மகனுக்கு சீட் மறுக்கப்பட்டால், ராஜினாமா செய்வேன் என சிதம்பரம் மிரட்டினார். என் மகனை நிறுத்தவில்லை என்றால், நான் எப்படி முதல்வராக இருப்பது என மத்தியப் பிரசேத முதல்வர் கமல்நாத் கூறினார். ஜோத்பூரில் மகனுக்கு பிரசாரம் செய்வதற்காக 7 நாள் செலவழித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலத்தின் மற்ற பகுதிகளை புறக்கணித்தார். இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவராக தொடர நான் விரும்பவில்லை. வேறு யாராவது ஏன் காங்கிரஸ் தலைவராக இருக்கக் கூடாது? தேர்தல் பிரசாரத்தில் நான் எழுப்பிய முக்கிய பிரச்னைகளை எல்லாம் கட்சி தலைவர்கள் முன்னெடுத்து செல்லவில்லை. ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ‘நாட்டின் காவலாளி திருடன்’ என சென்ற இடங்களில் எல்லாம் கோஷம் போட்டேன். இதனை எத்தனை தலைவர்கள் எடுத்து கூறினீர்கள் என கை தூக்குங்கள் பார்ப்போம்? ஒரு இயக்கத்தில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார். அவருடைய இந்த ஆவேசப் பேச்சை கேட்டு காங்கிரஸ் செயற் குழு உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.

Related Stories: