சிதம்பரத்தில் திருமா., விழுப்புரத்தில் ரவிக்குமார் வெற்றி: அதிமுகவுக்கு ஆறுதல் அளித்த தேனி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று தொடக்கி இன்று அதிகாலை வரை நீடித்தது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவனும், அதிமுக சார்பில் சந்திரசேகரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இருவரும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் சுமார் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், திமுக கூட்டணியில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுகவுக்கு ஆறுதல் அளித்த தேனி

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: