மே. வங்கத்தில் 20 வழக்குகள் பதிவு பாஜ வேட்பாளரை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பாஜ வேட்பாளரை கைது செய்ய மாநில போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், பராக்பூர் மக்களவை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டவர் அர்ஜுன் சிங். இவர் மீது மாநில போலீசார் தேர்தலின்போது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளை பதிவு செய்தனர். இதனால், அவரை கைது செய்ய மாநில போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அர்ஜுன் சிங் வழக்கு தொடர்ந்தார். இதை கோடை விடுமுறை கால நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, அர்ஜுன் சிங் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வக்கீல் ரஞ்சித் குமார், ‘‘அர்ஜுன் சிங் மீது கடந்த ஏப்ரல் 4 முதல் மே 20ம் தேதி வரை 20 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, அவரை கைது செய்வதற்கு மேற்கு வங்க போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும்,’’ என வாதிட்டார். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘அர்ஜுன் சிங்கை 28ம் தேதி வரை  கைது செய்யக்கூடாது, நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க அவரை அனுமதிக்க வேண்டும். மனுதாரர் கோர்ட்டை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்,’’ என தெரிவித்தனர்.

Related Stories: