பாமகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதிலடி கூட்டணிக்காக அதிமுகவும் கொள்கையை விட்டு தராது

விருதுநகர்: எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் விவகாரங்களில், கூட்டணிக்காக பாமக தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது என கூறியதற்கு பதிலடியாக, அதிமுகவும் கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்காது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணிக்கட்சிகள் சார்பாக பங்கேற்க உள்ள முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில்  அதிமுக தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டி: அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களை மீண்டும் எடுப்பதற்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம் என்று பாமக கூறியுள்ளது. தமிழகத்தில் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் மக்களின் கருத்துக்களை கேட்டப்பிறகே செயல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களின் மனநிலைக்கு எதிராக தமிழக அரசு செயல்படாது, மக்களின் முடிவை கேட்டு செயல்படுத்தப்படும்.

பெரும்பான்மை மக்கள் எதிர்க்கும் திட்டங்களை முதல்வர் ஏற்கமாட்டார். பாமக கூட்டணிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்காது என்றால், அதிமுகவும் கூட்டணிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்காது. அதிமுகவில் தற்போது சின்ன சிதறல் ஏற்பட்டு உள்ளது என கருணாஸ் கூறியுள்ளார். அதிமுக வலுவாக உள்ளது. மத்தியில் மோடி பிரதமராக வருவார். அந்த ஆட்சியில் அதிமுக பங்கு வகிக்கும். அதிமுகவை பற்றி கருத்துச் சொல்ல கருணாஸ் அரசியல் மேதை இல்லை. அவர் அதிமுகவில் மாவட்டச் செயலாளரோ, உயர்மட்டக்குழு உறுப்பினரோ இல்லை. அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ‘தேர்தல் முடிவுக்கு பின்பு கூட்டணியில் மாற்றம் வரும்’ என்று தமிழக பாஜ மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ‘தற்போது உள்ள கூட்டணி ஆழமான கூட்டணி. இந்த கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தேர்தலுக்குப் பின் வரும் மாற்றத்தை பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்றார்.

Related Stories: