100% ஒப்புகைசீட்டுகளை எண்ணக்கோரிய 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

புதுடெல்லி: ஒப்புகை சீட்டுகளை முதலிலேயே எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. டெல்லியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட 22 கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக முதலில் எண்ண வேண்டும் மேலும் ஒரு வாக்குசாவடியில் வாக்குகளை எண்ணும் பொழுது ஒப்புகை சீட்டில் பதிவான வாக்குகளுக்கும், வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் உடனடியாக அந்த சட்டமன்ற மற்றும் மக்களவைக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளிலும் உள்ள ஒப்புகை சீட்டுகளை 100% முழுமையாக எண்ண வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில், எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ணும் பொழுது கால விரையம் அதிகமாகும் என்றும், ஏற்கனவே இது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையம் முழுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைமுறை தாமதமானால் முழுமையான தேர்தல் முடிவுகள் விபரம் வெளியாக 2 முதல் 3 நாட்கள் வரை ஆகலாம் எனவும் கூறப்பட்டது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் இருக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

Related Stories: