ஜோலார்பேட்டை அருகே இன்று குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

ஜோலார்பேட்டை:  ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமம் கீழ்தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த  ஓராண்டாக இப்பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லையாம்.  இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். வாரத்திற்கு ஒரு முறை  குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், அதுவும் தற்போது கிடைக்காததால் விவசாய நிலங்களிலும், அருகில் உள்ள கிராமத்திற்கும் சென்றும் குடிநீரை எடுத்து வருகின்றனர்.  

சரிவர குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த கீழ் தெரு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார, ஊராட்சி செயலாளர் பிரபு ஆகியோர்  சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து  சென்றனர்.  இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: