மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆர்எஸ்எஸ் பொது செயலர் பையாஜி ஜோஷி சந்திப்பு

நாக்பூர்: ஆர்எஸ்எஸ் பொது செயலாளர் பையாஜி ஜோஷி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று சந்தித்து பேசினார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் பா.ஜ மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனவும், தே.ஜ கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டன. சிஎன்என் நியூஸ் 18 கருத்து கணிப்பில் பா.ஜ 276 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தது. இது கடந்த 2014ல் பா.ஜ வெற்றி பெற்ற இடங்களை விட 4 சீட்டுகள் அதிகம். தே.ஜ கூட்டணி 336 இடங்களையும் கைப்பற்றும் எனவும் அது தெரிவித்தது.

ஏபிபி நீல்சன் கருத்துக்கணிப்பில் தே.ஜ கூட்டணி 267 இடங்களையும், உ.பி.யில் பா.ஜ 50 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்திருந்தது. டைம்ஸ்நவ்-விஎம்ஆர் கருத்து கணிப்பில் 306 இடங்களை பா.ஜ கைப்பற்றும் என தெரிவித்திருந்தது. ரிபப்ளிக் டிவி.க்காக கருத்து கணிப்பு நடத்திய ஜன் கி பாத் அமைப்பு பா.ஜவுக்கு 287 இடங்கள் கிடைக்கும் என கூறியது. சி-வோட்டர் கருத்து கணிப்பில் பா.ஜ 287 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்திருந்தது. இப்படி கருத்து கணிப்பு நடத்திய பல நிறுவனங்களும் மீண்டும் பா.ஜ ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையாஜிஜோஷி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நாக்பூரில் நேற்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். பாஜ.வில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஆர்எஸ்எஸ் பங்கு முக்கியமானது. கடந்த தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் ஆர்எஸ்எஸ் முக்கிய பங்கு வகித்தது. நிதின் கட்கரியும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக இருந்தவர். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி,அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் பதவிக்கு பரிசீலனையா?

நிகழ்ச்சியைத் தொடர்ந்து நிதின் கட்கரி நிருபர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு நிதின் கட்கரி பதிலளிக்கையில், “அதை நான் 20, 50 முறை தெளிவுப்படுத்தி விட்டேன். பிரதமர் மோடி தலைமையில்தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். நிச்சயமாக அவர்தான் மீண்டும் பிரதமர் ஆவார்” என்று கூறினார். 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜ.வுக்கு கிடைத்த அதே இடங்கள் இப்போதும்  கிடைக்கும் என்று கட்கரி கூறினார். 2014 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 இடங்களில் பாஜ 23 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: