திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரை கடத்தி மிரட்டியவர்கள் அதிரடி கைது

திருப்பரங்குன்றம்: கடன் தகராறில் சுயேச்சை வேட்பாளரை காரில் கடத்தி மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி சார்பில் நிறுவனத்தலைவர் செந்தில்ராஜா (மாற்றுத்திறனாளி) போட்டியிடுகிறார். சென்னையை சேர்ந்த இவர் தேர்தலுக்காக தற்போது மதுரையில் வந்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த தினேஷ், வினோத்குமார் ஆகிய 2 பேர் செந்தில்ராஜாவை சந்தித்தனர். பிறகு அவரை காணவில்லை. அவரது செல்போனும் ‘ஸ்விட்ச் ஆப்’ ஆகி இருந்தது. இதுகுறித்து அக்கட்சி பொதுச்செயலாளர் அருண், திருப்பரங்குன்றம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். பின்னர் சிவகங்கை ரோட்டில் நின்றிருந்த செந்தில்ராஜாவை போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில், சென்னையில் செந்தில் ராஜா ரூ.30 லட்சம் கடன் வாங்கி ரூ.15 லட்சத்தை திரும்பச் செலுத்தியதும் மீதித்தொகை, வட்டியை இதுவரை செலுத்தாததும் தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த கடன் கொடுத்த தினேஷ், வினோத்குமார் ஆகியோர் செந்தில் ராஜாவை கடத்திச் செனறதாக தெரிகிறது. இதுகுறித்து வேட்பாளர் செந்தில்ராஜா கூறும்போது, ‘‘தேர்தல் பிரசாரத்திற்காக திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தேன். என்னை வழிமறித்த தினேஷ், வினோத்குமார் கடன் தொகைக்கான பேச்சுவார்த்தை எனக்கூறி காருக்குள் அழைத்துச் சென்றனர். காரில் அமர்ந்ததும் என் கண்களைக் கட்டி எங்கேயோ அழைத்துச் சென்றனர். செல்போனையும் ஆப் செய்து விட்டனர். கடன் தொகையை கேட்டனர். தேர்தலில் செலவாகி விட்டது. விரைவாக பணத்தைக் கொடுத்து விடுகிறேன் என்று கூறியதால், என்னைத் திரும்பக் கொண்டு வந்து மதுரை, சிவகங்கை ரோட்டில் இறக்கி விட்டுச் சென்றனர்’’ என்றார். விசாரணை நடத்திய போலீசார், தினேஷ், வினோத்குமாரை நேற்று கைது செய்தனர். இதை தொடர்ந்து பாதுகாப்பு கோரியதால், மதுரை நகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் வேட்பாளர் செந்தில்ராஜாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: