12 கோடி பத்திர நகல்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா?: டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள் ஆய்வு செய்ய பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை, மே 16: கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட 12 கோடி பத்திரங்களின் நகல்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மண்டல டிஐஜி, மாவட்ட பதிவாளர்கள் தரப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த அலுவலகங்கள் கடந்த 2009 முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த 1973 முதல் 2009ல் உள்ள 50 கோடி பத்திர நகல் பக்கங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தனியார் மென்பொருள் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதன் மூலம் பணிகள் நடந்து வருகிறது.

 

இந்நிலையில், தற்போது வரை 12 கோடி பத்திர நகல் பக்கங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பக்கங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக டிஐஜி, மாவட்ட பதிவாளர்கள் அலுவலகம் ஆய்வு செய்து ஒப்புதல் தர வேண்டும். ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்து சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்று சரிபார்க்கவில்லை. இதனால், அந்த நிறுவனங்கள் சார்பில் ெதாடர்ந்து பத்திர நகல்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொள்ளாமல் நிறுத்தி வைத்தனர். இதுதொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு சார்பதிவாளர்கள் புகார் ெதரிவித்தனர். இந்நிலையில், பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கடந்த 1973-2009 இடைப்பட்ட காலத்தில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பத்திரங்களின் நகல்களை டிஐஜி, மாவட்ட பதிவாளர்கள் பணியாளர்கள் தர பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், மாவட்ட பதிவாளர் அலுவலகம் சார்பில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 20 சதவீத பத்திர நகல்களையும், டிஐஜி அலுவலகம் சார்பில் 5 சதவீத பத்திர நகல்களையும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று தர பரிசோதனை செய்து ஒப்புதல் தர வேண்டும். இதற்காக இரண்டு அலுவலகங்கள் சார்பில் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி அனைத்து மண்டல டிஐஜி, மாவட்ட பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: