வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஏலகிரி மலையில் ட்ரெக்கிங்: வனத்துறை ஏற்பாடு

வேலூர்: தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு ட்ரெக்கிங் சென்ற குழுவினர் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 23 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறை தடைவிதித்தது. இதையடுத்து தமிழக மலைப்பகுதிகளில் ட்ரெக்கிங் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் ட்ரெக்கிங் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் மலைப்பகுதிகளில் ட்ரெக்கிங் செல்ல ஏதுவான இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவற்றில் 114 இடங்களுக்கு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் இருந்து அமிர்தி நதி வரையும், திருப்பத்தூரில் காடகனூர்-அஞ்சத்தி ஜொனை, பாளைகணியனூர்-ஜலகம்பாறை வரையும் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. மலையேற்றத்தின்போது, 5 நபர்கள் முதல் 15 நபர் கொண்ட குழுவாக செல்ல அனுமதியும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மலையேற்றம் செய்ய அனுமதிக்கப்படும். மலையேற்றம் செல்பவர்கள் மருத்துவரின் உடற்தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். குழந்தை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மலையேற்றத்திற்கு அனுமதியில்லை. வனத்துறையினரின் வழிகாட்டுதலின் படியே மலையேற்றம் மேற்கொள்ள வேண்டும்.  

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், மதுபானம், சிகரெட், எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் எடுத்து செல்லக்கூடாது. விலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. செல்லபிராணிகளை உடன் எடுத்து செல்லக்கூடாது. மேலும் மலையேற்றத்தின் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு வனத்துறையினர் பொறுப்பில்ைல என்றும் வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். வனத்துறையின் அனுமதியின்றி மலையேற்ற செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பத்தூர் வனச்சரகத்திற்குட்பட்ட ஏலகிரி மலையில் உள்ள இயற்கை காட்சிகளை பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் ட்ரெக்கிங் செல்வதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பயண கட்டணம் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எளிதான வழித்தடம் இந்தியர்களுக்கு ரூ.200, வெளி நாட்டியினருக்கு ரூ.1500, மிதமான வழித்தடம் இந்தியர்களுக்கு ரூ.350, வெளிநாட்டியினருக்கு ரூ.3 ஆயிரம், கடினமாக வழித்தடம் இந்தியர்களுக்கு ரூ.500, வெளிநாட்டியினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் திருப்பத்தூர் வனச்சரக அலுவலகம், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலகத்தை அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்ல தற்போது தான் முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: