தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமல் குற்றாலநாதர் கோயில் வளாக கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல்

தென்காசி :  தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதால் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் வளாக கடைகள் மற்றும் கார் பார்க்கிங்கை ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் நிலவும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காணப்படும் மிதமான சாரல், இதமான குளுகுளு தென்றல், மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு, உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் அருவிக்குளியல் ஆகியவற்றை அனுபவிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்திற்கு தேவையான உணவு, உடை, பழங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்குவர்.

 குற்றாலம் அருவிப்பகுதிக்கு செல்லும் சன்னதி பஜார் பகுதியில்தான் இந்த கடைகள் அமைந்திருக்கும். இந்த இடம் முழுவதும் குற்றாலநாதர் கோயிலுக்குச் சொந்தமானது ஆகும்.

ஆண்டுதோறும் இந்த இடத்தை சீசன் காலமான 120 நாட்களுக்கு அறநிலையத்துறை ஏலம் விடும். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், ரத வீதிகளில் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமம், தங்கும் விடுதி ஏல உரிமம் உள்ளிட்டவற்றிற்கு மே முதல் வாரம் ஏலம் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 இதையடுத்து ஏலத்தில் எடுத்தவர்களும் மே கடைசி வாரத்திலேயே தற்காலிக கடைகளை அமைக்கத் துவங்குவர். மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் சீசன் துவங்கிவிடும். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் வளாக கடைகள் மற்றும்  கார்பார்க்கிங்கை ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் வரும் 27ம் தேதி வரை நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என நேற்று அறிவித்துள்ளார். இதனால் ஏலம் ஜூன் முதல் அல்லது 2வது வாரத்திற்கு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. இச்சமயத்தில் குற்றாலத்தில் சீசன் துவங்கி கூட்டம் வரத்துவங்கினாலும் கடைகள் அமைக்க முடியாத நிலை உள்ளது. கோயில் நிர்வாகத்தினரும் இதனால் வருவாய் இழப்பு ஏற்படுமோ என்ற ஐயப்பாட்டில் உள்ளனர்.

எனவே அறநிலையத்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் தற்போதே உரிய அனுமதி பெற்று ஏலம் விடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு மே மாத்தில் விடப்பட்ட ஏலம் மூலம் சுமார் ரூ. 20 லட்சம் அறநிலையத்துறைக்கு வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: