ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ.1 கோடி கொள்ளை கட்டப்பஞ்சாயத்து கும்பலை பிடிக்க தனிப்படை தீவிரம்

சென்னை : துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ஒரு கோடி ரூபாய் கொள்ளையடித்த கட்டப்பஞ்சாயத்து கும்பலை தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் நாராயணன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை முகமது தாஹீர் என மாற்றிக்கொண்டார். இந்த நிலையில், போரூர் அருகே 110 ஏக்கர் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா ஏற்பாடு செய்து தருவதற்காக தாஹிர், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் ராமகிருஷ்ணன், ராஜதுரை ஆகியோரிடம் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி பட்டா வாங்கி தரவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், ராஜதுரை ஆகியோர் தாஹீரின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளனர். இதுபற்றி பஞ்சாயத்து பேசுவதற்காக தனக்கு அறிமுகமான நெல்லையை சேர்ந்த ஜான்இளங்கோவன் என்பவரை சென்னைக்கு வரவழைத்துள்ளார் தாஹீர்.

இதையடுத்து ஜான்:

இளங்கோ தலைமையில், தாஹீர், ராமகிருஷ்ணன், ராஜதுரை ஆகியோருடன் துரைப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது தாஹீரிடம் நிறைய பணம் இருப்பதை உறுதி செய்த ஜான்இளங்கோ கும்பல், பஞ்சாயத்து பேச அழைத்து வந்தவர் என பாராமல் தாஹீரை சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் தாஹீரின் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘ஒரு கோடி ரூபாய் தந்தால் தாஹீரை விட்டுவிடுகிறோம். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, சென்னை அண்ணா சதுக்கம் பகுதிக்கு தாஹீரின் மனைவி தஹீரா பானு வந்ததும் அவரிடம் 1 கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு தாஹீரை விடுவித்துவிட்டு அங்கிருந்து கட்டப்பாஞ்சாயத்து கும்பல் தப்பிச் சென்றது.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் தாஹீர் கொடுத்துள்ள புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜான் இளங்கோ கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: