நான் ஏழை ஜாதி மாயாவதிக்கு மோடி பதில்

‘‘நான் ஒரே ஜாதியைச் சேர்ந்தவன். அது, ஏழை ஜாதி,’’ என உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். ‘பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட இனத்தின் போலி தலைவர்’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று முன்தினம் விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின்  சோனேபத்ரா பகுதியில் நேற்று நடந்த பாஜ தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:எனது ஜாதி பற்றிய புதிய விஷயத்தை எதிர்க்கட்சிகள் கூறத் தொடங்கி விட்டன. அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். மோடி ஒரே ஜாதியைச் சேர்ந்தவன்தான். அது, ஏழை ஜாதி. இந்த அரசே  ஏழைகளுக்காகத்தான் அமைக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தை நாசமாக்கிய சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும், தற்போது ஒன்று சேர்ந்துள்ளன. அவர்களின் கூட்டணி மகா கலப்பட கூட்டணி.

மன்மோகன் சிங் அரசு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டது. அந்த அரசால் நாட்டுக்கு கெட்ட பெயர். அப்போது, பல ஊழல்கள் நடந்தன. ஆனால், அது பற்றி காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரசாருக்கும் எந்த வருத்தமும்  இல்லை. ஏனென்றால்,  ‘அது நடந்து விட்டது. அதனால் என்ன’ என்ற சிந்தனை உடையவர்கள்தான் காங்கிரசார். இது, அவர்களின் மனநிலையை காட்டுகிறது. வலுவான அரசு என்ன செய்யும் என்பதற்கு பாலகோட்  தாக்குதல்தான் உதாரணம். இதுதான் புதிய இந்தியா. அது தீவிரவாதிகளின் மறைவிடத்துக்கு சென்று கொல்லும். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் (1998) இதேநாளில்தான் போக்ரான் அணு குண்டு சோதனை வெற்றிகரமாக  நடத்தப்பட்டது. அந்த கடுமையான பணியை மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு இந்நாளில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கலப்பட கூட்டணி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து மோடி மேலும் பேசுகையில், ‘‘வாஜ்பாய் ஆட்சி முடிந்தபின், மத்தியில் ஒரு பலவீனமான கூட்டணி ஆட்சி அமைத்தது. அந்த மகா கலப்பட கூட்டணி, நமது உளவுத்துறை அமைப்புகளை பலவீனப்படுத்தின. இதனால், நீண்ட  காலம் பல விளைவுகளை சந்தித்ததாக,  பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த பலர் நிறைய எழுதியுள்ளனர். மூன்றாவது அணி அரசு செய்தது எல்லாம் குற்றத்துக்கு ஈடானவை. கலப்பட கூட்டணி ஆட்சிக்கு வரும்  போதெல்லாம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்’’ என்றார்.

Related Stories: