திருப்பூர் : திருப்பூரில் பெண் போலீஸ் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகள் பர்வின் பாவி (23). இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லூர் திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். 2018ம் ஆண்டு முதல், திருப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வந்தார். இவர் திருப்பூரில் பணியாற்றும் ஆயுதப்படை பிரிவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், இரவு 7.30 மணி அளவில் திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். பர்வின்பாவி காதல் விவகாரத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி