வாக்களிக்க வரும் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்: தேர்தல் அதிகாரிகள் தகவல்

மும்பை: மும்பையில் வாக்களிக்க வரும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நான்காவது மற்றும் இறுதிக்கட்டமாக மும்பையில் வரும் 29ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மும்பையில் 26 வாக்குச்சாவடிகளில் முற்றிலும் பெண்களை கொண்டு இயக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இவை ‘சக்தி மத்தான் கேந்திரா’ என்று அழைக்கப்படுகிறது. இதில் முற்றிலும் பெண் தேர்தல் அதிகாரிகள் இடம் பெற்று இருப்பார்கள்.

இந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் பெண்களுக்கு தலா ஒரு சானிட்டரி நாப்கின் பாக்கெட் வழங்கப்படும். பெண் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நல்லெண்ண அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் அதிகாரி தெரிவித்தார். அதோடு வாக்களிக்க வரும் இரு பாலருக்கும் குளிர்பானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களை கவருவதற்காக வாக்குச்சாவடியில் ரங்கோலி வரையவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் குர்லா, அந்தேரி, போரிவலி போன்ற பகுதியில் இருக்கும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதியில் 300 வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண்கள் பணியாற்றும் வகையில் இருக்கவேண்டும் என்று மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி திலிப்ஷிண்டே உத்தரவிட்டு இருந்தார். மேலும் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கும் விதமாகவும், தேர்தல் பணியில் பெண்களையும் ஈடுபடுத்தும் விதமாகவும் இந்த பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் மக்களவை தேர்தலில் பெண்கள் முழு அளவில் வாக்களிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே மும்பை ரயில் நிலையங்கள் சிலவற்றில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: