மருத்துவ நிபுணர் குழு அமைக்கக் கோரி அப்பல்லோ மேல்முறையீடு: 26ம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: மருத்துவ நிபுணர் குழு அமைக்கக் கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. அப்பல்லோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். நிபுணர் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடியானதால் உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மேல்முறையீடு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள், மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்பல்லோ செவிலியர்கள், அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், என பல்வேறு தரப்பிடமும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் உரிய மருத்துவக்குழு அமைக்காமல், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரிக்க அப்பல்லோ நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஜெ. மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தது. அந்த மனுவில், ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் வாக்குமூலங்களை ஆணையம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு  தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 4ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆணையத்தின் விசாரணை 90% முடிவடைந்துள்ள நிலையில், மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க கோருவதை ஏற்க முடியாது என கூறி அப்பல்லோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளது. மருத்துவ நிபுணர் குழு அமைக்கக் கோரிய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: