பிரதமரை ராகுல் விமர்சித்த வழக்கில் விளக்கம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்: 30ல் விசாரணை

புதுடெல்லி: பிரதமருக்கு எதிராக கருத்து தெரிவித்தது தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ரபேல் ஒப்பந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று, சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘காவலாளி ஒரு திருடன் என்பதை நீதிமன்றமே கூறிவிட்டது’’ என்றார். நீதிமன்ற தீர்ப்பை தனக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி மாற்றிப் பேசியதை எதிர்த்து, பாஜ எம்பி மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் பதிலளிக்க உத்தரவிட்டது. ராகுல் தரப்பில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார். மேலும், வழக்கை முடித்துக் கொள்ள வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

Advertising
Advertising

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘‘ராகுல் ‘வருத்தம்’ என்ற வார்த்தையை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளார். அவரது மன்னிப்பு கேட்கும் விதமே பல சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார். ராகுல் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எம்.சிங்வி ஆஜராகி, ‘‘மனுதாரர் தரப்பு வக்கீல், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றுவதை அனுமதிக்க கூடாது’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘பிரமாண பத்திரத்தில் வருத்தத்தை அடைப்புக்குறியில் போட்ட காரணத்தை ராகுல் விளக்க வேண்டும். எனவே அவரது விளக்கத்தை ஏற்க முடியாது.

இந்த வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். ரபேல் சீராய்வு மனுவுடன் சேர்த்து இந்த வழக்கு வரும் 30ம் தேதிக்கு விசாரிக்கப்படும்’’ என்றனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பின் பேட்டி அளித்த மூத்த வக்கீல் ரோத்தகி, நோட்டீஸ் அனுப்பப்பட்டதன் மூலம் ராகுல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். அடுத்த சில மணி நேரத்தில், ஏப்ரல் 30ல் ராகுல் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்ற இணையதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: