நாடு முழுவதும் வாழும் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் :கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உறுதி

கொல்கத்தா : நாட்டை பொறுத்தவரை இந்த மக்களவைத் தேர்தல் புதிய உச்சத்தை எட்டுவதற்கான தேர்தலாக இருக்கும் என்றும் மேற்கு வங்கத்திற்கு ஜனநாயகத்தை நிறுவும் தேர்தலாக இருக்கும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 11-ம் தேதி மற்றும் 18-ம் தேதி என 2 கட்ட மக்களவைத் தேர்தல் இம்மாநிலத்தில் முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வரும் ஏப்ரல் 23, 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பிரசாரம் செய்துவருகின்றனர்.  ஊடக சந்திப்புகளும் நடந்து வருகின்றன.அதன்படி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, வங்கதேசத்தில் இருந்து வந்திருக்கும் அகதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பதை தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா தெளிவாக சுட்டிக் காட்டி இருப்பதாக கூறினார்.

குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறிய பின், மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் வாழும் அகதிகள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். மேலும் நாட்டை பொறுத்தவரை இந்த மக்களவைத் தேர்தல் புதிய உச்சத்தை எட்டுவதற்கான தேர்தலாக இருக்கும் என்றும் மேற்கு வங்கத்திற்கு ஜனநாயகத்தை நிறுவும் தேர்தலாக இருக்கும் என்றும் அமித்ஷா எடுத்துரைத்தார். மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இருந்தும் பிரதமர் மோடி போட்டியிடுவாரா என நிரூபர்கள் கேட்டதற்கு, அப்படி ஒரு திட்டம் தற்போது வரை இல்லை என்றும் அமித்ஷா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: