உட்கட்சி பிரச்னையால் ஓசூர் அமமுக வேட்பாளர் புகழேந்தி கடும் அதிருப்தி

சென்னை: தன்னுடைய தொகுதியிலேயே தனக்கு எதிரான நடவடிக்கையில் கட்சியினர் ஈடுபட்டதால் ஓசூர் அமமுக வேட்பாளர் புகழேந்தி கடும் அதிருப்தியை அடைந்துள்ளார். அதிமுகவில் கர்நாடகா மாநில செயலாளராக இருந்தவர் புகழேந்தி. இவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணியில் இணைந்தார். பின்னர், அவர் சிறை சென்ற பிறகு டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக ஈடுபட்டு வந்தார். அமமுகவை ஆரம்பித்த பிறகு கட்சியை பலப்படுத்தி வந்தார்.இந்நிலையில், அமமுகவில் கர்நாடகா மாநில செயலாளர் பொறுப்பாளரகவும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஓசூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அவர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், அவர் பிரசாரம் செய்யும் போது உட்கட்சி உறுப்பினர்களே அவருக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டனர். ஓசூர் ஒன்றிய செயலாளரும் எதிரணியிருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பிரசாரத்திற்கு யாரும் வருவதில்லை எனவும் அமமுகவின் தலைமைக்கு புகழேந்தி புகார் தெரிவித்துள்ளார். ஆனால், தினகரன் நடவடிக்கை எடுக்கவில்லை. . இருந்தாலும் புகழேந்தி தன்னுடைய ஆதரவாளர்களை மட்டும் முன்னிருத்தி பிரசாரத்தை மேற்கொண்டு வந்துள்ளார். இதேபோல், தருமபுரி மக்களவை  தொகுதியில் போட்டியிட்ட பி.பழனியப்பனின் ஆலோசனைக்கு இணங்க புகழேந்தி செயல்பட வேண்டும் என்று அமமுக தலைமை கூறியதால் அவர் பழனியப்பனை  தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவரின் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதில்லை என்பதால் தேர்தல் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், பிரசாரத்தை மேற்கொள்வதிலும் தொடர்ந்து புகழேந்திக்கு சிக்கல் ஏற்பட்டது.

தன்னுடைய நிலைகள் குறித்து ஓசூர் வேட்பாளர் புகழேந்தி, தலைமையிடம் தொடர்புகொள்ள முயற்சிக்கும் போது எந்தவித பதிலும் கிடைக்காமல் இருந்துள்ளார். இதனால், புகழேந்தி கடுமையான அதிருப்திக்கும், மனவருத்ததிற்கும் ஆளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.இது குறித்து புகழேந்தியை தொடர்புகொண்டு கேட்டபோது, ஜெயலலிதா இருந்தபோது ஒன்றிய செயலாளர் ஒருவர் இதுபோன்ற ஒரு தப்பை செய்தாலோ, தேர்தலில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டாலோ அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். யார் சொன்னாலும் கேட்கமாட்டார். நேரடியாகவே அதை எதிர்கொள்வார். இப்படிதான் ஒரு தேர்தலை நடத்த வேண்டும். கட்சியில் இருந்து கட்சிக்கும், வேட்பாளருக்கும் எதிராக செயல்பட்டவர்கள் நீக்கப்படவில்லை. எனவே, கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் உள்ளேன். மண்டல பொறுப்பாளர் சரியாக இருந்தால் இந்த பிரச்னை வரப்போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: