4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நாளை  வெளியிடுகிறார். தமிழகத்தி தேர்தல் வழக்குகள் காரணமாக திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் காலமானதால் அத்தொகுதி என சேர்த்து 4 தொகுதிகள் காலியாக இருந்தன. தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து 4 தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கனவே, 18 தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த நிலையில் மீதம் உள்ள இந்த 4 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இன்று வேட்புமனு வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால், அமமுக சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நாளை வெளியிட உள்ளார். காலை 7 மணி அளவில் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருப்பரங்குன்றம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும், அரவக்குறிச்சியில் சிறுபான்மையினர் ஓட்டை மையப்படுத்தி ஒருவரும், ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூரில் பொதுவான ஒரு நபரையும் வேட்பாளராக டிடிவி.தினகரன் தேர்ந்தெடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், நாளை மறுதினம் அமமுகவை கட்சியாக பதிவு செய்வதற்கு முன்பு பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து தினகரன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: