விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப்போட்டி தர்மபுரி நபீஷா முதலிடம் பிடித்தார்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டியில் தர்மபுரியை சேர்ந்த நபீஷா முதலிடம் பிடித்தார். 2 மற்றும் 3ம் இடங்களை மடோனா, ருத்ரா ஆகியோர் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்த விழாவில், திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலிக் கட்டிக்கொள்ளும் சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும், கொச்சின், மும்பை, கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகளும், மிஸ்கூவாகம் அழகிப்போட்டியும் நடத்தப்படும்.

இதன்படி மிஸ் கூவாகம் போட்டி நேற்று நடந்தது. விழுப்புரம் டிஎஸ்பி திருமால் போட்டியை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். முதல் சுற்றில் சேலம் வாசனி, ஈரோடு இலியா, கோவை வனிதா, மதுரை சுமித்ரா உள்ளிட்ட 36 திருநங்கைகள் பங்கேற்றனர். முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த சுற்றில் பாலியல், எய்ட்ஸ் விழிப்புணர்வு கேள்விகளும், சமுதாய மேம்பாடு சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்பட்டது. பிற்பகலுடன் இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் 3வது சுற்றிற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரவு நகராட்சி மைதானத்தில் மிஸ் கூவாகம் இறுதிப்போட்டி நடந்தது. இதில் மிஸ்கூவாகம் 2019 பட்டத்தை தர்மபுரி நபீஷா வென்றார். 2ம் இடத்தை கோவை மடோனா, 3ம் இடத்தை பவானியை சேர்ந்த ருத்ரா ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: