ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: ஜனசேனா கட்சியை சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் குப்தா கைது

அனந்தபூர்: ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை சேர்ந்த வேட்பாளர் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. சின்னங்கள் தெளிவின்றி இருப்பதாக கூறி வாக்கு இயந்திரத்தை உடைத்த ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதனன் குப்தா கைது செய்யப்பட்டார். இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அதில் ஆந்திர மாநிலமும் ஒன்று. ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். வகுப்பதிவுக்காக ஆந்திர மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில், 45 ஆயிரத்து 920 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில், 3 கோடியே 93 லட்சத்து 45 ஆயிரத்து 717 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் முதல்முறையாக 10 லட்சத்துக்கு அதிகமான இளம்வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ஜனசேனா கட்சியின் வேட்பாளர் மதுசூதன் குப்தா, தனது வாக்கை செலுத்துவதற்காக வருகைத் தந்தார். அப்போது சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தொகுதிகள் சரியாக குறிப்பிடப்படவில்லை என தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் நடத்திய மதுசூதன் குப்தா, இவிஎம் மெஷினை இழுத்துத் தரையில் தள்ளினார். இதையடுத்து, வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மதுசூதன் குப்தாவை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: