தேர்தல் பிரசாரத்தில் விதிமுறை மீறல் சாமியப்பா... ஐயப்பா... சுரேஷ் கோபிய காப்பாத்துப்பா

தேர்தல்  நடைமுறை சட்டத்திற்கு எதிராக, சபரிமலை ஐயப்பன் பெயரை பிரசாரத்தில் பயன்படுத்திய  திருச்சூர் பாஜ வேட்பாளர் நடிகர் சுரேஷ்கோபிக்கு, தேர்தல் அதிகாரியான  கலெக்டர் அனுபமா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சபரிமலை  ஐயப்பன் கோயிலில் இளம் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதை தேர்தலுக்கு பயன்படுத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டன.  ஆனால் வழிபாட்டு தலங்களையோ, சபரிமலை ஐயப்பன் கோயில் பெயரையோ தேர்தல்  பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா  கூறியிருந்தார்.

இதை ஏற்க முடியாது என்றும், சபரிமலை ஐயப்பன்  விவகாரம் குறித்து தேர்தலில் பேசுவோம் என்று பாஜ கூறியிருந்தது. இந்த  நிலையில் திருச்சூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் நடிகரும்,  ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ்கோபி நேற்று முன்தினம் திருச்சூர் தேக்கின்காடு  மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்  பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சபரிமலை  ஐயப்பன் மக்களின் உணர்வாக உள்ளார். கேரளாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும்  சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக அலை வீசும். சபரிமலை  விவகாரத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மனம் புண்பட்டு உள்ளது. அதில் நானும்  ஒருவன். அதன் அடிப்படையில் தான் நான் ஓட்டு கேட்கிறேன். சபரிமலையை நான்  தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தவில்லை. ஆனால் கேரளாவில் உள்ள அனைத்து  குடும்பங்களும் இதுகுறித்து தான் விவாதித்து வருகிறது. இவ்வாறு அவர்  பேசினார்.

தேர்தல் நடைமுறை சட்டத்தை மீறி சுரேஷ்கோபி பேசிய விவகாரம்  குறித்து திருச்சூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அனுபமாவுக்கு  தெரியவந்தது. இதையடுத்து அவர் சுரேஷ்கோபி பேசிய வீடியோ காட்சிகள்  முழுவதையும் பரிசோதித்தார். இதில் சபரிமலை விவகாரம் தொடர்பாக அவர்  பேசியது தெரியவந்தது: இதையடுத்து கலெக்டர் அனுபமா, 48 மணி நேரத்திற்குள்  விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகர் சுரேஷ்கோபிக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். இதுகுறித்து சுரேஷ் ேகாபி கூறியதாவது: நான் தேர்தல் நடைமுறை சட்டத்தை எந்த விதத்திலும் மீறவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு ஐயப்பன் பெயரை பயன்படுத்தமாட்டேன் என்று அந்த பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளேன். ஐயன் என்றால் என்ன அர்த்தம் என்பதை  தெரிந்துக் கொள்ளவேண்டும். தனக்கு பிடித்தமான தெய்வத்தின் பெயரை கூட வெளியே பேசக்கூடாது என்று நிபந்தனை விதிப்பது ஏற்க முடியாதது.  இதற்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். கலெக்டர் அளித்த  நோட்டீசிற்கு தகுந்த விளக்கம்  அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறுகையில், ‘‘திருச்சூரில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ்கோபி தேர்தல் நடைமுறை சட்டத்தை மீறியுள்ளார். கலெக்டர் ேநாட்டீஸ் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை. இதற்கு சுரேஷ்கோபி விளக்கம் அளிக்கவேண்டும். தெய்வத்தின் பெயரில் ஓட்டு கேட்பது தவறாகும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: