ஓடிஏ, மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் மின்தகடுகள் அமைப்பு

சென்னை: மீனம்பாக்கம் மற்றும் ஓடிஏ ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:மின்சார சிக்கனத்தை பின்பற்றும் வகையிலும், சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் வகையிலும் மீனம்பாக்கம் மற்றும் ஓ.டி.ஏ (ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்) ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் 428 கிலோ வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையிலான சோலார் மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதம்தோறும் 57 ஆயிரத்து 780 யூனிட் மின்சாரம் 2 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் கிடைக்கும். இதேபோல், ஆண்டுக்கு ரூ.26 லட்சத்து 34 ஆயிரத்து 768 மிச்சமாகும். மரபுசாரா எரிசக்தி திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே பல மெட்ரோ ரயில் நிலையங்களில் 4.1 மெகா வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையில் சோலார் மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் மேலும் 2.5 மெகா வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையிலான சோலார் மின்தகடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: