நிகோபார் தீவுகளில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம்

போர்ட்பிளேர்: நிகோபார் தீவுகளில் இன்று காலை அடுத்தடுத்து 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இன்று அதிகாலை 5.14 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் உண்டானது. இதைத் தொடர்ந்து அடுத்த 2 மணி நேரத்தில் 4.7 ரிக்டர் தொடங்கி 5.2 ரிக்டர் வரை 8 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வியல் மையம் கூறியுள்ளது

நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அளவாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி முன்னெச்சரிக்கையும் ஏதும் விடுக்கப்படவில்லை. முன்னதாக கடந்த மாதம் அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவிலும், ஜனவரி மாதம் நிகோபார் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புதிதல்ல.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: