கள்ளச்சந்தையில் விற்கும் டாஸ்மாக் சரக்கால் காசு பார்க்கும் காவல்துறை

கே.வி.குப்பம் மேல்மாயில் ரோடு பகுதியில் ஒரு பங்க் கடையில் டாஸ்மாக் சரக்கு வெளிப்படையாகவே அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்.  அதேபோல் லத்தேரி, டி.கே.புரம் உட்பட பல இடங்களில் டாஸ்மாக் சரக்கு மதுக்கடைகளில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து அதிக விலைக்கு  விற்கிறார்களாம். இதனை போலீசும் கண்டுகொள்வதில்லையாம். குறிப்பாக கே.வி.குப்பம், விரிஞ்சிபுரம், லத்தேரி போலீஸ் எல்லைக்குள் நடக்கும் இந்த  விற்பனை முழுமையாக காவல்துறை ஆசியுடன் நடப்பதாகவும், இதனை டாஸ்மாக் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. டாஸ்மாக் விற்பனையில் கே.வி.குப்பம் பகுதியில் ஆளுங்கட்சியின் ஒன்றிய பொறுப்பில் உள்ளவரே போலீசாருக்கு மாமூலை  அள்ளிவிட்டு கள்ளச்சந்தையில் சரக்கை விற்று காசு பார்க்கிறாராம். இதுபற்றி தெரிந்தும் தனிப்பிரிவு போலீசாரும் எஸ்பிக்கு தகவல்  தெரிவிப்பதில்லையாம்.

ஓசி சரக்கு..,  இரவுநேர மஜா

ஈரோடு மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இதில், 100 கடைகளில் அனுமதி பெற்ற ‘’பார்’’கள் உள்ளது. ஆனால், உள்ளூர்  அமைச்சர் ஒருவர் உதவியுடன் அங்கொன்றும், இங்கொன்றுமாக அனுமதியற்ற டாஸ்மாக் ‘’பார்’’கள் இயங்கி வருகின்றன. அமைச்சர் தொகுதிக்கு  உள்ளேயே இரண்டு அனுமதியற்ற ‘’பார்’’ இயங்குகிறது. ‘’பார்’’களில் மது மட்டுமே குடிக்க அனுமதி. ஆனால், இந்த ‘’பார்’’களில் மது  பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக, 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகிறது. அதனால், நள்ளிரவிலும் லாரி டிரைவர்கள் ஆஜராகி விடுகின்றனர்.  இவர்களை மையமாக கொண்டு, இங்கு விபச்சார அழகிகளும் குவிந்து விடுகின்றனர்.

இதை, கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பவானி சப்-டிவிஷன் காவல்துறை அதிகாரிகள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டனர். காரணம்,  மதுவும், மாதுவுடன் தடையின்றி சப்ளையாகிறது. இந்த சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் இவர்கள், ‘’ஓசி சரக்கும், இரவுநேர மஜாவும்  கிடைக்கனும்னா, ரொம்ப கொடுத்து வெச்சிருக்கனும் மாப்ளே... கரும்பு திண்ண கூலி வேற கெடைக்குது... என்ஜாய்...’’ என மாறி மாறி டயலாக்  அவிழ்த்து விடுகின்றனர்.

இளம்பெண் விவகாரமா?  அலறும் போலீஸ்

பொள்ளாச்சி பாலியல் விவகார சம்பவத்துக்கு பின் இளம்பெண்கள் சம்பந்தமான புகார்கள் என்றாலே போலீசார் அலறுகிறார்களாம். வழக்கமாக  இளம்பெண்கள் மாயம், கடத்தல் என வரும் புகார்களில் வழக்கு பதிவு செய்யாமலேயே இழுத்தடிப்பு செய்வது உண்டு. ஆனால் இப்போது புகார் வந்ததும்  உடனடியாக வழக்கு பதிவு செய்து விடுகிறார்களாம். நாகர்கோவிலில் பிளஸ் 1 மாணவி கடத்தல் என புகார் வந்ததும், வழக்கு பதிவு செய்த போலீசார்,  கடத்தப்பட்ட வாலிபரின் மொபைல் எண்ணையும் வாங்கி அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த அந்த வாலிபர்,  நேரடியாகவே இன்ஸ்பெக்டருக்கு போன் செய்துள்ளார். நீங்கள் எதுவும் கவலைப்படாதீங்க சார்.

இன்னும் 2 நாளில் நாங்களே ஸ்டேஷனுக்கு வருவோம்  என கூறி விட்டு போனை துண்டித்து உள்ளார். பின்னர் இன்ஸ்பெக்டர் அந்த போனை தொடர்பு கொள்ள சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாம். தேர்தல்  வேலையே தலைக்கு மேல் கிடக்கு. இவன் வேற 16 வயது பிள்ளையை கடத்திட்டு போய் நம்ம தலைக்கு வேட்டு வைக்கிறானே என்று வருத்தப்பட்ட  இன்ஸ்பெக்டரு, பேசாம வழக்கை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றுங்கள் என கூறி வழக்கை இப்போது அனைத்து மகளிர்  காவல் நிலையத்துக்கு மாற்றி விட்டார்களாம். நாங்க மட்டும் என்ன இங்க சும்மாவா இருக்கோம் என்ற ரீதியில் அனைத்து மகளிர் போலீசாரும்  கொதிக்கிறார்களாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: