கேரளாவில் மார்க்சிஸ்ட் ஆபிசில் பலாத்காரம் இளம்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

பாலக்காடு: கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி கமிட்டி அலுவலகத்தில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கேரளாவின் பாலக்காடு மாவட்டம் செரூப்லசேரி நகரில் கடந்த சனிக்கிழமை பெண் குழந்தை ஒன்று சாலையோரத்தில் அனாதையாக வீசப்பட்டு கிடந்தது. அக்குழந்தையின் தாய் யார் என்பதை கண்டுபிடித்து, அவரிடம் போலீசார் விசாரித்தபோது, கடந்த 10 மாதங்களுக்கு முன், செரூப்லசேரி மார்க்சிஸ்ட் கட்சி கமிட்டி அலுவலகத்தில் இளைஞர் அணி அமைப்பினர் ஒருவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதில் முறைதவறி பிறந்த குழந்தைதான் இது என்றும் அவர் விவரித்தார். மேலும் கல்லூரிக்கான இதழ் ஒன்று தயாரிக்க அங்கு சென்றிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் விளக்கினார்.

அந்த இளம்பெண் இந்திய மாணவர் அமைப்பின் உறுப்பினர் என்பதும் அவரது குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கும் நல்ல தொடர்பு உள்ளதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தங்களது அலுவலகத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தால், அது குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதேசமயம், போலீசார் நேர்மையான முறையில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ``மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தற்போது பாலியல் பலாத்கார மையங்களாக மாறிவிட்டன. இப்படி கூறுவதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதுதான் உண்மை. இடதுசாரிகள் தலைமையிலான ஆட்சியில் கேரளாவில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார். இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செரூப்லசேரி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆளும் கட்சி மீது இளம்பெண் பாலியல் புகார் தெரிவித்திருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: