பொள்ளாச்சி விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிறது தமிழக அரசு: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோவை: பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு கடைபிடித்த பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதார கொள்கைகளால் ஒட்டுமொத்த தேசமும் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் பஞ்சாலைகள், பம்ப்செட், உதிரிபாக உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கும், புதிதாக தொழில் துவங்குவதற்கும் எங்களுடைய வேட்பாளர் முயற்சி மேற்கொள்வார். கோவை மாநகர பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கவும், குடிநீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மாவட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  ரூ.25 லட்சம் இழப்பீடு என நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஆனால் அந்த தீர்ப்பை பற்றி வாய்திறக்காமல் மவுனம் காத்து வருவதன் மூலம் உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதிக்கிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி மற்றும் பொள்ளாச்சி டி.எஸ்.பி ஆகியோரை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. எனவே உயர் நீதி மன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும். தமிழக நலனுக்கு எதிராக செயல்பட்டு மாநில உரிமைகளை பறித்துவரும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகத்தில் படுதோல்வியை சந்திக்கும். மேலும், மக்களிடம் கருத்துகளை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: