விவசாயம் சார்ந்த மானிய கடன் விவகாரம் மகளிர் திட்டத்தில் பல ேகாடி முறைகேடு

* ஊழலை மறைக்க பெண்களுக்கு கிடா விருந்து

* அரசியல்வாதிகள், அதிகாரிகள் அசத்தல்

சிறப்பு செய்தி

ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தில் விவசாயம் சார்ந்த பயிற்சிக்கு அளிக்கப்பட்ட நிதியில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனை மறைக்க 60 வட்டார ஒருங்கிணைப்பு பெண்களை அழைத்துச்சென்று பவானிசாகர் வனப்பகுதியான தெங்குமரஹாடா பகுதியில் கிடா விருந்து வைத்து கொண்டாடியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மகளிர் குழு பெண்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயம் சார்ந்த மகளிர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் மானிய கடன் வழங்க தேசிய மகளிர் திட்டத்தில் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலா 25 பேர் கொண்ட விவசாயம் சார்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பயிற்சி, அந்தந்த ஊராட்சி கிராம சேவை கட்டிடத்தில் தொடர்ந்து 20 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு நடந்துகொண்டிருந்தது ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் 225 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் இருந்து தலா 25 பேர் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 5,625 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, உணவுக்கு வழங்கப்பட்ட தலா 75 ரூபாயை 25 நாட்கள் கணக்கிட்டு 84 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயில், கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாயை வட்டார ஒருங்கிணைப்பாளர்களும், திட்ட அலுவலர்களும் சுருட்டி விட்டனர். இதுதவிர, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

இதற்கும் சுமார் 40 லட்சம் ரூபாய் மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. 20 நாட்கள் நடைபெற வேண்டிய பயிற்சி 15 நாட்களே நடைபெற்றது. இந்த பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் பெண்களுக்கு உணவுக்காக தலா 75 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதற்காக 85 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில்தான் மாபெரும் முறைகேடு நடைபெற்றது. உள்ளூர் உணவகங்களில் உணவுக்காக எட்டு லட்சம் ரூபாய் வரை பில் பெற்றுள்ளனர். இந்த தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க 14 வட்டாரங்களை சார்ந்த ஒங்கிணைப்பு பெண்கள் 60 பேரை சுற்றுலா அழைத்துச்சென்றுள்ளனர். பவானிசாகர் வனப்பகுதியான தெங்குமரஹாடா பகுதியில் ஆற்றங்கரையில் கிடா விருந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், திட்ட அலுவலர் சீனிவாசன் தேர்தல் காரணமாக பணிமாற்றம் செய்யப்பட்டார். உதவி திட்ட அலுவலர்களான சம்பத், சாந்தா ஆகியோர் இந்த முறைகேடு குறித்து ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதன்பிறகே இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தினால் ஏராளமான தகவல் வெளியாகும்.இவ்வாறு மகளிர் குழுவினர் கூறினர். ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மகளிர் திட்டத்திற்கான பணம் முழுவதும் மத்திய அரசிடமிருந்து வட்டார அளவிளான கூட்டமைப்புக்கே நேரடியாக விடுவிக்கப்படுகிறது. எனவே முறைகேடு குறித்து மாவட்ட கலெக்டர் மட்டுமே விசாரிக்கமுடியும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: