மண்டியா: மண்டியா மக்களவை தொகுதியில் நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். கர்நாடகாவில் உள்ள மண்டியாவின் மைந்தன் என்று பெயர் எடுத்தவர் கன்னட நடிகர் அம்பரீஷ். இவர் கைகாட்டியவர்கள்தான் அந்த தொகுதியில் வெற்றி பெற்றனர். அவரது மறைவுக்கு பிறகு அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடம் வாய்ப்பு கேட்டார். ஆனால், இந்த தொகுதியை கூட்டணி கட்சியான மஜத.வுக்கு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், சுமலதா இத்தொகுதியில் சுயேச்சையாக களம் காண முடிவு செய்துள்ளார். அதே நேரம், அவரை பாஜ.வுக்கு இழுக்க இதன் மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்து வருகிறார். பாஜ.வில் சேர சுமலதாவுக்கு விரும்பம் இல்லாமல் போனால், தேர்தலில் அவருக்கு ஆதரவாக செயல்படவும் பாஜ திட்டமிட்டுள்ளது.