வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்


மங்களூரு: கர்நாடகாவில் இறந்துபோன தாயின் சடலம் அருகே 3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த மாற்றுத்திறனாளி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குந்தபுரம் தாசனஹடி மூடுகோபாடியைச் சேர்ந்த ஜெயந்தி ஷெட்டி (62) என்பவர், மாற்றுத்திறனாளி மகள் பிரகதி ஷெட்டி (32) என்பவருடன் வசித்து வந்தார். ஜெயந்தி ஷெட்டியின் கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தாயும், மகளும் வசித்து வந்தனர். தனது மகளை ஜெயந்தி ஷெட்டி மிகவும் சிரமப்பட்டு கவனித்துக் கொண்டார். கடந்த சில ஆண்டுக்கு முன்பு தான், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பிரகதியின் கால் துண்டிக்கப்பட்டது.

ஜெயந்திக்கும் சர்க்கரை வியாதி இருக்கிறது. இந்நிலையில் அவர்களது வீட்டில் இருந்து எவரும் வெளியே வரவில்லை. எங்கேயாவது சென்றிருக்கலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் ஜெயந்தியின் செல்போனுக்கு போன் செய்தும் எந்த பதிலும் இல்லை. அதையடுத்து கோபாடி கிராம பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் ஷெட்டி மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, ​​பிரகதி தரையில் கிடந்தார். தகவலறிந்த போலீசார் வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது ஜெயந்தி ஷெட்டி இறந்து கிடந்தார்.

அதேநேரம் உணவு, தண்ணீரின்றி தவித்த பிரகதி ஷெட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோட்டேஸ்வரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தனது தாய் இறந்து 3 நாட்களாகியும், அவரது சடலத்துக்கு அருகேயே பிரகதி ஷெட்டி படுத்திருந்தார். உணவு, தண்ணீர் கூட கிடைக்காமல் மயக்க நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் பிரகதி மீட்கப்பட்டும், அவரை காப்பாற்ற முடியவில்லை’ என்றார்.

The post வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: