தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை8: சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில்  இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ  தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக முரசொலி நிர்வாக மேலாண் இயக்குனர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ரங்கநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்  திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் உதயநிதி ஸ்டாலின் 66 மாணவர்களுக்கு லேப்டாப்கள், 216 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு  கல்வி உதவித்தொகை  மற்றும் கல்வி உபகரணங்கள்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1050 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக தலைவரின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் எத்தனையோ மாவட்டத்துக்கு சென்றுள்ளேன். அப்போது இல்லாத சந்தோஷம் இங்கு வந்தபோது அதிகமாக உள்ளது. நான் 6 கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது ஒரு மாணவி என்னிடம் கலைஞர் தாத்தா டி.வி கொடுத்தார். நீங்கள் செட்டாப் பாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் தாத்தா டிவி கொடுத்தார். என்னுடைய அப்பா செட்டாப் பாக்ஸ் கொடுப்பார் என்று  கூறினேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். இதுபோல மக்களுக்கு தேவையானதை செய்யும் ஒரே ஆட்சி திமுக மட்டும்தான். 40 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதுமட்டுமில்லாமல் 21 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழகத்துக்கு விரைவில் நல்லாட்சி ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:  கழகத்தலைவர் மு.க.ஸ்டாலினின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆணுக்கு நிகராக பெண்கள்  உள்ளனர். தந்தை சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் கலைஞர். அதுமட்டுமில்லாமல், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், 8வது படித்த பெண்களுக்கு திருமண உதவி திட்டம் என பல்வேறு திட்டங்களை கலைஞர் கொண்டு வந்தார். அதே வழியில் தற்போது மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்து வருகிறார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது.  இதில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர்.   திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் எல்லோரும் தேன்நிலவுக்கு செல்வார்கள். ஆனால் ஜனநாயகத்துக்காக பாடுபட்டு சிறைக்கு சென்ற ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். மத்தியில் இருக்கும் பாசிச ஆட்சியை ஓழிக்க வேண்டும் என்பதற்காக பாடும்படும் தலைவர் முக.ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

35 லட்சத்தில் சிறுவர் பூங்கா நவீன உடற்பயிற்சி நிலையம்

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் உள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் 35 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சி நிலையத்தை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திறந்து வைததார்.சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் மாநகராட்சி பூங்கா பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சத்தை இதற்காக ஒதுக்கியிருந்தார். இந்த நிதியில் சிறுவர் பூங்கா, நவீன உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான தயாநிதி மாறன் திறந்து வைத்தார். ஜெ.அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மதன் மோகன், வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து ஜெ.அன்பழகன் கூறுகையில், ‘‘சேப்பாக்கம் தொகுதி மக்களின் நீண்டநாள் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: