அதிமுக கூட்டணி பண நல கூட்டணி: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை:  அதிமுக கூட்டணி பணநல கூட்டணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்த பின் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது? இன்னும் சில கட்சிகளோடு எண்ணிக்கை அடிப்படையில் பேசி முடிவு செய்யப்பட வேண்டி உள்ளது. திமுக சார்பில் எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி ஆய்வு செய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இன்னும் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வரும்? இரண்டாண்டு காலமாக அதிமுக அரசை எதிர்த்து பொதுமக்கள் பிரச்னைக்காக போராடுகிறபோது எந்தெந்த கட்சிகள் எங்களுடன் தோழமை கொண்டிருந்ததோ அந்தந்த கட்சிகளை அழைத்து நிச்சயமாக நாங்கள் பேச முடிவு செய்துள்ளோம்.

தேமுதிக உங்களுடன் இணைய வாய்ப்புள்ளதா? அந்த மாதிரி வாய்ப்பு இருந்தால் உங்களை அழைத்து முதலில் சொல்கிறேன். திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது? கூட்டணி கட்சிகளுக்கு எல்லாம் பகிர்ந்து கொடுத்த பிறகு அதுபோக இருக்கக்கூடிய தொகுதிகளில் திமுக போட்டியிடும். தேமுதிகவிடம் ஏதாவது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறீர்களா? அவர்கள் தரப்பில் ஏதாவது பேசுகிறார்களா? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு மொத்தமாக எப்போது முடிவுக்கு வரும்? தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. தேதி அறிவித்த பின்பு முழுமையடையும். தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்? டி.ஆர்.பாலு தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாராகிறது. முழுமையாக முடிந்த பின்பு தேதி முடிவு செய்யப்பட்டு வெளியிடப்படும்.

உங்கள் பிறந்த நாள் அன்று தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்கலாமா? நான் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கட்சி தோழர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். கலைஞர் மறைந்து இன்னும் ஓராண்டாகவில்லை. எனவே எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று திமுகவினரிடம் கூறியுள்ளேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மக்கள் நலக்கூட்டணி என்று அதிமுக கூட்டணியை ராமதாஸ் கூறியுள்ளாரே? அதிமுக கூட்டணியை பண நல கூட்டணி என்று மக்கள் கூறுகிறார்கள். திமுக கூட்டணிக்கு வரவில்லை என்பதால் பாமகவை காட்டமாக நீங்கள் விமர்சனம் செய்வதாக கூறுகிறார்களே?  நான் ஒன்றும் காட்டமாக விமர்சனம் செய்யவில்லை. ஏற்கனவே, அதிமுகவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பாஜகவை ராமதாஸ் விமர்சனம் செய்திருக்கிறார். நான் ஒன்றும் அதிகமாக விமர்சனம் செய்யவில்லை. அவரது  விமர்சனத்துக்கு முன்பு இதெல்லாம் சாதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: