நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு

* 9 தொகுதிகள் கொடுக்காவிட்டால் அதிரடி முடிவு

* மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

* டிடிவி தினகரனுடன் சேர ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகள் கொடுக்காவிட்டால்  22ம் தேதி மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்படும்  என்று விஜயகாந்த், அதிமுகவுக்கு கெடு விதித்துள்ளார். அதேநேரத்தில்  டிடிவி தினகரன் அணியினருடனும் தேமுதிக தலைவர்கள் பேச்சுவார்த்தையை  தொடங்கியுள்ளனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. மாசிமகமான நேற்று முன்தினம் தனது  கூட்டணிகளை முடிவு செய்து தொகுதிகளை இறுதி செய்து  விடுவதில் அதிமுக தீவிரம் காட்டியது. அதற்கான பணிகளை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  தீவிரம் காட்டினர். முதலாவதாக பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 7 சீட்  ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவை எம்பி சீட் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக, பாஜவுடன் பேச்சுவார்த்தை முடித்து, 5 சீட் ஒதுக்கப்பட்டது. இதை  தொடர்ந்து தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்து  விட வேண்டும் என்பதில் அதிமுக தரப்பு படு வேகத்தில் இருந்தனர்.

அதிமுக  கூட்டணியில் தேமுதிகவுக்கும் தொகுதிகளை ஒதுக்கி  கூட்டணியை முடித்து அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்க திட்டமிட்டனர்.  தொகுதி எண்ணிக்கைகள் முடிவு பெற்றால் எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பான  பணிகளை தொடங்கி விடலாம் என்று அதிமுக பணிகளை முடுக்கிவிட்டனர்.

ஆனால்,  தேமுதிகவுக்கு இந்த கூட்டணியில் 3 தொகுதிகளை மட்டும் ஒதுக்க அதிமுக தரப்பு  திட்டமிட்டது. அதற்கான பேச்சுவார்த்தையும் அமைச்சர் தங்கமணி தலைமையில்  நடைபெற்றது. இதனால் பாமக, பாஜ கட்சிகளை இணைத்த கையோடு தேமுதிகவுடனும்  கூட்டணியை முடிவு செய்திட முயற்சி மேற்கொண்டனர். அதன்படி மத்திய  அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்து  கூட்டணியையும் அறிவித்துவிடலாம் என்று கணக்கு போட்டனர். அதற்கான  ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென தேமுதிக தரப்பில் இருந்து  அதிக தொகுதிகள் கேட்டு நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் செல்வது ஒத்திவைக்கப்பட்டது.

யாரும் எதிர்பாராத  வகையில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை தேமுதிகவுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது தான் காரணம்.

பாமகவுக்கு எத்தனை  தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அதைவிட ஒரு தொகுதியாவது கூடுதலாக  எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில்  தெரிவிக்கப்பட்டது. பியூஸ் கோயல் மட்டும் விஜயகாந்த்தை நேரில்  சந்தித்து பேசினார். அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது  என்று கூறினார். இதனை கேட்ட கட்சியின் பொருளாளர் பிரேமலதாவும்,  அவரது தம்பியும் துணை பொதுச்செயலாளருமான சுதீசும் டென்ஷனாகி  விட்டனர். கடந்த முறை எங்கள் தலைமையில் போட்டியிட்ட பாமகவுக்கு 7  தொகுதிகள் மட்டும் கொடுக்கப்பட்டது. நாங்கள் 14 தொகுதிகளில்  போட்டியிட்டோம். ஆனால் இப்போது எங்களுக்கு வெறும் 3 தொகுதிதான்  தருவேன் என்று கூறுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றனர். அவர்களை  சமாதானப்படுத்த பியூஸ் கோயல் முயற்சி செய்தார். ஆனால்  பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 11 தொகுதிகள்  வேண்டும். 9 தொகுதிகளுக்கு குறைய முடியாது. பாமகவுக்கு வட மாவடங்களில்தான்  செல்வாக்கு. எங்களுக்கு தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி உள்ளது. இதனால்  அதிமுகதான் இறங்கி வரவேண்டும்.

நாங்கள் இருந்தால்தான் திமுக கூட்டணிக்கு  கடும் போட்டியை உருவாக்க முடியும். இல்லாவிட்டால் சரண் அடைய வேண்டிய  நிலைதான் உள்ளது என்று அதிமுக தலைவர்களிடம் எடுத்துக் கூறினர். ஆனால்  அதிமுக பிடிவாதமாக உள்ளது. இதற்கிடையே தேமுதிக சார்பில்  வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘பியூஸ் கோயல் தொகுதி பங்கீடு பற்றி பேச  வரவில்லை. விஜயகாந்த் உடல் நலம் பற்றி விசாரிக்க வந்தார்” என  கூறப்பட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில், தேமுதிக கேட்ட தொகுதிகளை தராமல்  புறக்கணிப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க  தேமுதிக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சதீஷ்  அழைத்து உள்ளார். வரும் வெள்ளிக்கிழமை (22ம் தேதி) சென்னையில் இந்த  ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதை கூட்டம் போல நடத்தாமல் ஒவ்வொரு  பகுதியில் இருந்தும் நிர்வாகிகளை வரவழைத்து விஜயகாந்தை சந்திக்க  ஏற்பாடு செய்வது என்ற நோக்கில் அழைத்து அவர்களிடம் கருத்து அறிய  சுதீசும், பிரமேலதாவும் முடிவு செய்து உள்ளனர்.

விஜயகாந்த்  வெளிநாட்டில் இருந்து வந்ததும் சந்திக்க வந்த நிர்வாகிகளை  சந்திக்க வேண்டாம் என பிரேமலதா கூறி இருந்தாராம். இப்போது இந்த  வாரத்தில் அழைக்கிறோம் என கூறி உள்ளார். அநேகமாக வெள்ளிக்கிழமை  அழைப்பார்கள் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த ஆலோசனையின்போது, மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதா,  எத்தனை தொகுதிகள் தந்தால் ஏற்பது, அல்லது டிடிவி தினகரனுடன் இணைந்து  போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்கிறார்கள். இதுகுறித்து தேமுதிக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:  ‘‘தேமுதிகவுக்கு 40 தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது.  கடந்த தேர்தலில் 4 சதவீதம் வாக்குகள் வாங்கியுள்ளோம். ஆனால், பாமகவுக்கு  வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது  பாமகவுக்கு 8 சீட் வழங்கப்பட்டுள்ளது. பாமகவைவிட ஒரு சீட் அதிகம்  தந்தால்தான் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவோம். இதை மறுத்தால் 22ம் தேதி  நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுப்போம். விஜயகாந்த்  உடல் நலம் குறைந்து விட்டதால் எங்கள் வாக்கு வங்கியையும்  குறைந்துவிட்டதாக அதிமுக தலைவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதை  இந்த தேர்தலில் நிரூபிப்போம். டிடிவி தினகரன் அணியினர் எங்களுடன் பேசி  வருகின்றனர்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: