வேலூரில் சூட்டை தணிக்கும் வெள்ளரிபிஞ்சு விற்பனை அமோகம்

வேலூர்: வெயிலுக்கு பெயர்பெற்ற வேலூரில் சூட்டைத்தணிக்கும் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மழை, வெயில், குளிர் என மூன்று சீதோஷ்ண நிலைகளும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப அதிகரித்து காணப்படும். குறிப்பாக வெயில் மிகச்சாதாரணமாக 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கும். அதற்கேற்ப வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

கோடை தொடங்குவதற்கு முன்பாகவே 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் வாகன ஓட்டிகள், முதியவர்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் வெள்ளரிப்பிஞ்சு விற்பனை வேலூரில் பழைய மீன் மார்க்கெட் அருகே விற்பனைக்கு குவிந்துள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து வெள்ளரிப்பிஞ்சு வியாபாரி கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இறுதியில் கோவையில் இருந்து வெள்ளரிப்பிஞ்சுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது வேலூர், காட்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளரிப்பிஞ்சு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அவை விற்பனைக்கு வந்துள்ளது. ஒருகிலோ வெள்ளரிப்பிஞ்சு 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் வெள்ளரிப்பிஞ்சு வரத்து அதிகரிப்புக்கு ஏற்ப விலை குறையும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: