சேலம்: தர்மபுரி இலக்கியம்பட்டியில் கடந்த 2000வது ஆண்டு பிப்ரவரி 2ம்தேதி, கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் வந்த பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்து எரித்தனர். இதில் மாணவிகள் கோகிலாவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகியோர் கருகி பலியாகினர். அப்போதைய முதல்வர் ஜெயலிதாவுக்கு பிளசன்ஸ்டே ஓட்டல் வழக்கில் தனி நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து அதிமுகவினர் இந்த செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு சேலம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் சீராய்வு மனுவில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் தண்டனை பெற்ற 3 பேரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுதலையானார்கள். இந்த விடுதலைக்கு 3 மகள்களை இழந்த பெற்றோர் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து நேற்றோடு 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களின் பெற்றோர் அந்த கொடும் துயரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. தங்கள் மகள்களை இழந்ததை நினைத்து பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் சிந்தினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி