மாநில கட்சிகளை இழுக்க அமமுக முயற்சி: தலைதெறிக்க ஓடும் பாமக, தமாகா

சென்னை: மக்களவை தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அமமுக முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அவர்களிடம் இருந்து பாமக, தமாகா ஆகிய கட்சிகள் தெறித்து ஓடுவதாக தகவல்கள் கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் மே மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இதனால் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்தக் கட்சிகள் பாஜக, அதிமுகவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை இணைந்து நடத்தி வருகின்றன.

இந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரசை தனியாக பிரித்து கொண்டு வர அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வந்தார். ஆனால், ராகுல்காந்தியோ, தமிழக தலைவர்களோ, திமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே மொத்தமாக வெற்றி பெற முடியும். மற்ற எந்தக் கட்சிகளுடன் சேர்ந்தாலும் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து, தினகரனின் முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டனர்.ஆனால் அதிமுகவை தவிர்த்து விட்டு பாஜவுடன் கூட்டணி சேரலாம் என்று சசிகலா முடிவு செய்தார். ஆனால் பாஜவோ, ஒன்றிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கருதுகிறது. அதிமுக, பாஜ கூட்டணி சேரும்பட்சத்தில், அந்தக் கூட்டணியில் டிடிவி தினகரனை எந்தக் காரணத்தைக் கொண்டும் சேர்க்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் பிடிவாதமாக கூறிவிட்டார்.

இதனால் ஒன்றிணைந்த அதிமுக என்பதே இல்லாமல் போய்விட்டது. தேசிய கட்சிகளாக இருப்பது தற்போது காங்கிரஸ், பாஜ மட்டுமே. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டன. இதனால் அமமுக தனித்துப் போட்டியிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி என்ற கோஷத்தை அமமுக தவிர்த்து விட்டது. தற்போது மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி என்று தனது கோஷத்தை தினகரன் மாற்றிவிட்டார். இதனால் திமுக, அதிமுக கூட்டணியில் சேராத கட்சிகளை தனது கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று தினகரன் முடிவு செய்து அதற்காக காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். அதில் அதிமுக, பாஜவை கடுமையாக எதிர்த்து வந்த பாமக தற்போது தனியாக உள்ளது.

இதனால் அக்கட்சியை தனது அணியுடன் இழுக்க தீவிரமாக முயன்று வருகிறார். ஆனால் பாமகவோ, திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக அணிக்கு செல்வதே மேல். அமமுகவுடன் சேருவது என்பது கண்ணை திறந்து கொண்டு பாழுங்கிணற்றில் விழுவதற்கு சமமானது என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி, கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.அதேபோல, திமுக கூட்டணியில் சேர தமாகாவும் தீவிரமாக முயற்சிக்கிறது. இந்தக் கூட்டணியில் இடம் இல்லாவிட்டால் அதிமுக கூட்டணிக்கு செல்ல தமாகா முடிவு செய்துள்ளது.

இதனால் அந்தக் கட்சியையும் சேர்க்க தினகரன் தீவிரமாக பேசி வருகிறார். ஆனால், ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தால் சில சீட்டுகளை பெற்றிருக்கலாம். சில மூத்த தலைவர்களின் பேச்சைக் கேட்டு அதிமுக கூட்டணிக்கு முயன்று, கடைசியில் தேமுதிக கூட்டணியில் சேர்ந்து, வரலாறு காணாத தோல்வியை தமாகா பெற்றது. அந்த தோல்வியில் இருந்து இன்றுவரை வாசனால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் மக்களவை தேர்தலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார். இதன் காரணமாகவே தினகரனின் முயற்சி தெரிந்ததும், பாமக, தமாகா கட்சிகள் தெறிந்து ஓடத் தொடங்கிவிட்டன. இதனால், ஒரு சில சமூக அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் சூழ்நிலைக்கு தினகரன் தள்ளப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: