சபரிமலை சீராய்வு மனுக்கள்: ஜன.22ல் விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘சபரிமலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 22ம் தேதி நடைபெறாது’ என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என இரு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதுடன், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயலும் பெண்களையும் தடுத்து நிறுத்தி வருகின்றன. இதனால், மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்ட போதும் அங்கு அசாதாரன சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி 23க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை ஜனவரி 22ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, இந்த மனுக்கள் 22ம் தேதி விசாரிக்கப்படும் என கருதப்பட்ட நிலையில்,  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், ‘சபரிமலை கோயில் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து சீராய்வு மனுக்களையும் வரும் 22ம் தேதி விசாரிப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் உள்ள பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா, மருத்துவ விடுப்பில் உள்ளதால் அன்றைய தினம் மனுக்கள் மீதான விசாரணை நடைபெறாது’ என தெரிவித்துள்ளார். இதனால், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மேலும் தாமதமாகும் என கருதப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: