கொல்கத்தாவில் நாளை மறுநாள் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை:  நாடாளுமன்ற தேர்தல் பற்றிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் கொல்கத்தாவில் 19ம் தேதி நடைபெறுகிறது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. மதச்சார்பற்ற அணி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த அணியை உருவாக்குவதில் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சியின் தொடக்கமாக கடந்த டிசம்பர் 10ம் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. அப்போது ஒருமித்த கருத்துடன் காங்கிரஸ்  தலைமையில் மதச்சார்பற்ற அணியாக செயல்பட்டு பாரதிய ஜனதாவை நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த முடிவு செய்யப்பட்டது.  

இதன் தொடர்ச்சியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவச் சிலை திறப்பு விழா கடந்த டிசம்பர் 16ம் தேதி சென்னையில் நடந்தது. கருணாநிதி சிலையை நாடளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து  வைத்தார்.அதைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கேரள முதல்வர் பினராய் விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா போன்ற  தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரளுவோம் என்று உறுதி அளித்தனர். முன்னதாக கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தார்.  அகில இந்திய எதிர்க்கட்சி தலைவர்களின் 2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தின்போது நாடாளுமன்ற ேதர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரசாரம் மற்றும் வியூகங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: