ஹெலிகாப்டர் ஊழல் கமிஷன் பணத்தில் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் 4 நாடுகளில் சொத்து குவிப்பு

புதுடெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், கமிஷன் பணத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாங்கிய சொத்துக்களை முடக்கும் முயற்சியில் சிபிஐ, அமலாக்கத்துறை இறங்கியுள்ளன. விவிஐபி.க்களின் பயணத்துக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்களை, ரூ.4,500 கோடிக்கு வாங்க கடந்த 2010ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் உட்பட 3 பேர் தரகர்களாக செயல்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் ரூ.423 கோடி கமிஷனாக பெற்று பலருக்கு பகிர்ந்து அளித்துள்ளனர். கிறிஸ்டியன் மைக்கேல் மட்டும் ரூ.225 கோடி கமிஷன் பெற்றுள்ளார். இத்தகவல் அம்பலமானதும் இந்த ஒப்பந்தம் கடந்த 2014ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.  இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கடந்த மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் உள்ள தனது எப்.இசட்.இ குளோபல் சர்வீஸஸ் நிறுவனம் மூலம், டெல்லியில் அவர் ஏற்படுத்திய போலி மீடியா நிறுவனம் ஒன்றுக்கு இந்தியர்கள் இருவருடன் சேர்ந்து பணத்தை அனுப்பியுள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 4 நாடுகளில் சொத்துக்களும், வங்கி கணக்குகளும் உள்ளது. இந்த சொத்துக்கள் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் நடைபெற்ற காலத்தில் வாங்கப்பட்டுள்ளன.  கிறிஸ்டியன் மைக்கேலுக்கு பினாமி பெயரில் இந்தியாவிலும் சொத்துக்கள் இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு கிறிஸ்டியன் மைக்கேலுடன் தொடர்புடைய டெல்லியில் உள்ள ரூ.1.12 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கும் முயற்சியில் விசாரணை அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை விசாரணை அமைப்புகள் நாடியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: